விலை கூடினாலும் மவுசு குறையாத 'சிவகாசி டைரிகள்'


விலை கூடினாலும் மவுசு குறையாத சிவகாசி டைரிகள்
x

விலை கூடினாலும் சிவகாசி டைரிகளுக்கு மவுசு குறையவில்ைல.

விருதுநகர்

நாட்குறிப்பு எழுதப்படும் டைரிகள், பலரது வாழ்வை பின்னோக்கி பார்க்க உதவும் கண்ணாடிகள்.

டைரி வந்தது எப்படி?

நிகழ்வுகளை கல்வெட்டாகவும், ஓலைச்சுவடியாகவும் குறித்து வைக்காமல் நம் முன்னோர்கள் சென்றிருந்தால் பழங்கால வாழ்வில், பழக்கவழக்கங்கள், சாதனைகள் என்று எதுவும் நம்மிடம் கிடைத்து இருக்காது. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்வுகளை குறிப்பாக்கும் பழக்கம் இருந்துள்ளது.

அந்த குறிப்புகளை குறிக்க ஒரு எழுதுபொருள் தேவை என்ற கற்பனைக்கு கிடைத்த வடிவம்தான் டைரி.

நாள்பட நிகழ்வுகளை எழுதி தொகுக்கும் பழக்கம் ஏராளமானவர்களுக்கு உள்ளது. பெண்களுக்கோ அன்றாட செலவுகளை குறிக்கும் வழக்கம் உண்டு. முக்கிய தினங்கள், விழாக்கள், பிறந்த நாள் என்று பலதரப்பட்ட விஷயங்களுக்கு முன்கூட்டியே நம்மை தயார்படுத்தி வந்த 'முற்கால செல்போன்'களாக இருந்தவைதான் இந்த டைரிகள்.

பேனா பிடித்து எழுத எழுத எழுத்து நடை மெறுகேறும். அவ்வாறு ஒவ்வொருவரின் எழுத்துநடையை ஆண்டுதோறும் ஒவ்வொரு படிக்கு மெறுகேற்றிய ஆசான்களாகவும் டைரிகள் விளங்கின. காலப்போக்கில் கணினி, செல்போன் யுகத்துக்குள் சென்று, அவை நம்மை அடிமையாக்கிக்கொண்டாலும் அதில் இருந்து மீண்டு வர மக்கள் முயற்சிக்கிறார்கள். அவ்வாறு முயற்சிக்க வேண்டிய பழக்கங்களில், டைரி எழுதுவதும் ஒன்று.

புத்தாண்டு பிறந்ததும் நண்பர், உறவினர், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு டைரி, காலண்டர் கொடுத்து அன்பை பரிமாறும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில் டைரி என்பது உங்களைப்பற்றி, உங்கள் தலைமுறையே தெரிந்து கொள்ள உதவும் ஒரு காலப்பெட்டகம்.

இவ்வாறு டைரியை பற்றி சிலாகித்து கூறும் வேளையில், டைரி உற்பத்தியில் இந்திய அளவில் முன்னணி நகரமாக விளங்கும் சிவகாசியில், இந்த ஆண்டு உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருந்ததா? என்பதை ஒரு விசிட் செய்து வரலாம், வாருங்கள்...!

பட்டாசு, அச்சக தொழில்

சிவகாசியின் இரு கண்களாக பட்டாசு உற்பத்தியும், அச்சக ெதாழிலும் உள்ளன.

கொரோனா இந்த இரு தொழில்களையும் முடக்கியது. பின்னர் பட்டாசு உற்பத்தி மெல்ல மீண்டு, கடந்த தீபாவளியின்போல் தங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் விற்பனை இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அச்சக ெதாழிலுக்கு கொரோனாவாலும், காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தாலும் பெரும் சிக்கல் வந்தது. இதனால் 2 ஆண்டுகளாக டைரி விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லாமல் சுணக்கம் நிலவியது.

ஆனால், இந்த ஆண்டு இத்தொழில் புத்துயிர் பெற்று இருப்பதாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்ட டைரி மாடல்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் ரசனையை அறிந்து விற்பனைக்கு வைத்ததால் இந்த ஆண்டு எதிர்பார்த்த விற்பனை உள்ளதாக டைரி உற்பத்தியாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

உற்பத்தி அதிகரிப்பு

சிவகாசி அசோக் (டைரி உற்பத்தியாளர்):- சிவகாசி பகுதியில் இருந்து. சில நிறுவனங்கள் எங்களை போல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

வேறு சில நிறுவனங்கள் இந்தியா முழுவதும் டைரிகளை அனுப்பி வைக்கின்றன. சிறிய நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்கின்றன. சிவகாசியில் உள்ள பெரும்பாலான அச்சகங்களில் ஆடி மாதம் முதல் டைரி உற்பத்தி பணியை தொடங்குகிறார்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில், தேவைக்கு ஏற்ப கூடுதல் டைரிகள் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 சதவீதம் கூடுதலாக டைரிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு டைரி விற்பனை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் டைரிகளுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்றார்கள்.

ஆன்லைனிலும் விற்பனை

வாடிக்கையாளர் குருசாமி:-

செல்போன்கள் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்த பின்னர் டைரி விற்பனை குறைந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் 200 அச்சகங்கள்தான் இருந்தன. ஆனால் தற்போது 800-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இன்னும் புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு அச்சகங்களும் இந்த போட்டி உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள புதிய, புதிய வடிவங்களையும், தகவல்களையும் டைரிகளில் கொடுத்து வருகிறார்கள். மளிகை கடைகளிலும், புத்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டைரிகள், விலை குறைந்ததாக இருக்கும். விலைக்கு ஏற்றாற்போல்தான் அதில் தகவல்களும் இருக்கும். ஆனால் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் நேரில் சென்று பார்வையிட்டால் 500-க்கும் அதிகமான வடிவங்களில் டைரிகளை தேர்வு செய்யலாம். டைரிகளை தேர்வு செய்யவே தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையில் டைரிகள் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப அந்த டைரியில் விஷயங்கள் இருக்கும்.

காகித விலை உயர்வு

விருதுநகர் சேதுராமலிங்கம் (விற்பனையாளர்):-

காகித விலை உயர்வால் டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனாலும். விற்பனையை பொருத்தமட்டில் பெரிய பாதிப்பு இல்லை. எனினும் உற்பத்தி குறைவால் விற்பனைக்கு தேவையான அளவு டைரிகள் கிடைக்காத நிலை உள்ளது.

செல்போன் பயன்பாட்டால் டெலிபோன் இன்டெக்ஸ் டைரி விற்பனை முற்றிலுமாக குறைந்துவிட்டது. செல்போன் பயன்பாட்டால், ஒரு காலத்தில் பெருமளவு விற்பனையாகிய வாழ்த்து அட்டை விற்பனை முற்றிலுமாக நின்று போய்விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



சிவகாசி டைரியின் சிறப்பு அம்சங்கள்

தனிநபர் குறித்த தகவல்களை சேகரித்து வைக்க ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் பெயர், முகவரி, தொலைபேசி, மொபைல் எண்கள், இ.மெயில் முகவரி, ரத்த வகை, டைரியை பயன்படுத்தும் நபரின் உயரம், எடை, அவர் பயன்படுத்தும் கார் எண், மோட்டார் சைக்கிள் எண், ஓட்டுனர் உரிமத்தின் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார், பான், பாஸ்போர்ட், கிரிடிட்கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி எண்கள், குடும்ப டாக்டரின் தொலைபேசி எண், ரத்த வங்கி எண் ஆகியவை குறித்து வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலண்டர், அடுத்த ஆண்டு காலண்டர், தேசிய விடுமுறை நாட்கள் விவரம், முக்கிய நாடுகளின் தேசிய விடுமுறை தினங்கள், சென்னையில் இருந்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழிகள், கிலோ மீட்டரில் தூர விவரம், யோகாசனம் செய்யும் முறை, ஒவ்வொரு மாதத்துக்கும் தனித்தனி திட்ட அறிக்கை, உலகத்தில் உள்ள முக்கிய நாடுகளின் தொலைபேசி ஐ.எஸ்.டி. எண்கள், எந்தெந்த காயத்துக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்ற விவரம், உணவு பொருட்களில் உள்ள கலோரி விவரம், ஒரு மனிதன் எவ்வளவு உயரம் இருந்தால் அவர் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்ற விவரம், உணவு அருந்த வேண்டிய நேரம், உடல் உறுப்புகள் செய்யும் பணிகள் ஆகியவை உள்ளன.

அதேபோல காலண்டரில் உள்ளது போன்று அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம் போன்ற விவரங்களும் உள்ளன.. 1753-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை உள்ள நாட்களில் எந்த மாதம், எந்த தேதியில், என்ன கிழமை என்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் வசதி, தமிழகத்தில் உள்ள முக்கிய தாலுகாகளின் தொலைபேசி எஸ்.டி.டி. எண்கள் என பல்வேறு விவரங்களை டைரியில் பிரசுரித்து தருகிறார்கள்.


30 சதவீத விலை உயர்வு ஏன்?

சிவகாசி ராயல்மணி (உற்பத்தியாளர்):-

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களில் டைரிகள் தயாரிக்கப்பட்டாலும் சிவகாசியில் தயாரிக்கப்படும் டைரிகளுக்கு எப்போதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. சிவகாசி தயாரிப்பை விட மற்ற பகுதியில் உற்பத்தியாகும் டைரிகள் குறைந்த விலையில் விற்கப்படுவதாக கூறினாலும், சிவகாசியைப் போல் தரமானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

நாங்கள் தரத்துக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம். மேலும் முக்கிய குறிப்புகள், தகவல்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். வாடிக்கையாளர்களின் ரசனை மாற்றத்துக்கும், அவர்களது கருத்துக்களை உள்வாங்கியும் ஒவ்வொரு ஆண்டும் புதுமைகளையும் புகுத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை மற்றும் கூலி உயர்வுதான் இந்த விலை ஏற்றத்துக்கு காரணம்.

கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு டைரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனையும் அதிகரித்து இருக்கிறது.


Next Story