சிறப்பு கால்நடை சுகாதார- விழிப்புணர்வு முகாம்

கீழ்வேளூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார- விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார- விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சுகாதாரம்-விழிப்புணர்வு
கீழ்வேளுர் ஒன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 100 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றது. நாகை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கால்நடை மருத்துவ முகாம் கீழ்வேளூர் ஒன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
120 முகாம்கள்
கடந்த 2022-ம் ஆண்டு ஒரு ஒன்றியத்திற்கு 20 கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் என நாகை மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களுக்கு 120 முகாம்கள் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஜூலை மாதம் முதல் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இபுராஹிம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கீழ்வேளூர் வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், வெங்கிடங்கால் ஊராட்சி தலைவர் பசுமதி, தாசில்தார் ரமேஷ், கால்நடை மருத்துவர்கள் சிவபாலன், லாரன்ஸ் ராதா, பிரியதர்ஷினி, திவாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.