ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
ஊட்டச்சத்து குறைபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 127 குழந்தைகள் மையங்களில் உள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 455 குழந்தைகளில் 40 ஆயிரத்து 573 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டது.
இந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தமிழக அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு அருகில் முகாம்கள் நடத்தப்பட்டது.
முகாமில் ஊட்டச்சத்து மிகவும் குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறிப்பட்டு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சை முகாம்
இந்த நிலையில் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார். கலசபாக்கம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா முன்னிலை வகித்தார். இதில் கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த 150 குழந்தைகள் கலந்து கொண்டன.
முகாமை மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் நல மருத்துவர் ராஜசேகரன், மருத்துவர் விஜயரமணன் ஆகியோர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
முன்னதாக மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உடல் எடை, உயரம், ரத்த பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.