பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவிய போட்டிகள்

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடக்கிறது.
உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, ஓவிய போட்டி, வினாடி- வினா போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகள் அனைத்தும் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடக்கிறது.
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா ? என்ற தலைப்பிலும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பிலும் வருகிற 26-ந் தேதி காலை 9 மணிக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.
அதே போல் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விண்வெளி சுற்றுலா என்ற தலைப்பிலும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விண்வெளி அதிசயம் என்ற தலைப்பிலும் வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு ஓவிய போட்டி நடத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு 27-ந் தேதி காலை 9 மணிக்கு விண்வெளி மற்றும் நிலைத்தன்மை (ஸ்பேஸ் அண்டு சஸ்டைனபிலிட்டி) என்ற தலைப்பில் வினாடி- வினா போட்டி நடக்க உள்ளது.
மேலும் விவரங்களுக்கு...
இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி மூலமாக வருகிற 24-ந் தேதிக்குள் 'நிர்வாக அதிகாரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி, நெல்லை மாவட்டம் - 627133, தமிழ்நாடு' என்ற முகவரியில் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04637-281940, 281942, 281230, 9486041737 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்துடன் தங்கள் சொந்த பொறுப்பில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளி அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இந்த தகவல் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.