ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்த நர்சிங் மாணவி மூச்சுத்திணறி சாவு

ஆத்தூர் அருகே ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்தபோது நர்சிங் மாணவி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தாா்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்தபோது நர்சிங் மாணவி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தாா்.
நர்சிங் மாணவி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேல சேர்ந்தபூமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் சாகுபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழையகாயல் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் அகல்யா. இளைய மகள் கவுசல்யா (வயது 18). இவர் நாசரேத் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக ஜலதோஷம் பிடித்து இருந்ததால் நேற்று காலை வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்ததாக கூறப்படுகிறது.
அசைவற்று கிடந்தார்
அப்போது எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த வெந்நீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்து கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டின் பின்புறம் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த கவுசல்யாவின் தாய் வீட்டுக்குள் வந்து பார்த்தார்.
அப்போது ஆவி பிடித்துக்கொண்டிருந்த தன் மகள், திடீரென அசைவற்று வெந்நீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவளை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த கவுசல்யா முகம் வெந்நீரில் பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது போன்று தோல் உரிந்து இருந்துள்ளது.
தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் கவுசல்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்தபோது நர்சிங் மாணவி மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.