50 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும்
இண்டூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இண்டூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் உங்கரானஅள்ளி ஊராட்சி ஜெய்நகர், ராமன் நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு இதுவரை சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் சீராக வெளியேறுவதில்லை. மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
பட்டா வழங்கவேண்டும்
இண்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.