ஓசூரில் பரபரப்பு:சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியைகடித்து குதறிய தெருநாய்கள்நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓசூர்
ஓசூரில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறின. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய்கள்
ஓசூரில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதும், சாலைகளில் நடந்து செல்வோரையும், வாகன ஓட்டிகளையும் விரட்டிச்செல்வதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஓசூர் பாலாஜி நகரில் சிறுவர், சிறுமிகள் உள்பட 7 பேரை தெருநாய்கள் கடித்து குதறின. அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிசிச்சை பெற்றனர்.
அதேபோல் கடந்த மாதம் ஓசூர் முனீஸ்வர் நகரில், ஒரு முதியவரை தெருநாய்கள் கடித்து குதறியது. இதில் அவர் ரத்த காயங்களுடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஓசூர் நகரில் தெருநாய்கள் கடித்ததால் அரசு ஆஸ்பத்திரிக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது.
சிறுமியை கடித்து குதறின
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் வாசவி நகரை சேர்ந்த கார்த்திக், சுசீலா என்ற தம்பதியரின் 6 வயது மகள் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், சிறுமியை சுற்றி வளைத்து கடித்து குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.