வனவிலங்குகள் புகுந்து விட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை


வனவிலங்குகள் புகுந்து விட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகள் புகுந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

வனவிலங்குகள் புகுந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சிறுத்தை வீடியோ வைரல்

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தந்த பகுதி மக்கள் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

கூடலூர் நகருக்குள் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று இரவில் வந்து செல்கிறது. இதனால் இரவு, அதிகாலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பிரபல ஓட்டலில் சிறுத்தை ஒன்று சமையல் அறைக்குள் நுழைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. தொடர்ந்து பொதுமக்கள் இடையே காட்டுத் தீயாக பரவி பீதி உருவாகியது.

கடும் நடவடிக்கை

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வடமாநிலத்தில் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்த சிறுத்தை வீடியோ காட்சியை கூடலூர் ஓட்டல் என குறிப்பிட்டு வதந்தியாக பரப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் கூடலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

புகாரை பெற்ற போலீசார் வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டி சைபர் கிரைம் போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். இதுகுறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் கூறும்போது, தகவல் பரிமாற்றத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபரை கைது செய்வார்கள். வனவிலங்குகள் புகுந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி, மக்களிடையே அச்சத்தை உருவாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊட்டி சாண்டிநல்லா பகுதியில் புலிக்குட்டிகள் நடமாடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.


Next Story