விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி கள்ளச்சாராய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு மறுவாழ்விற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அறியாமையிலும், போதிய விழிப்புணர்வு இன்மையினாலும் பொதுமக்கள் கள்ளச்சாராயம், விஷச்சாராயத்தை அருந்தி உயிரிழந்துள்ளனர். மரக்காணம் எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் 80 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 14 பேர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட 61 பேர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு 53 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

416 பேர் கைது

மரக்காணம் சம்பவத்திற்கு பின்னர் இதுவரை 416 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 309 ஆண்களும், 107 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மதுபாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும். மேலும் தனிநபர் ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அளவைத்தவிர அதிக எண்ணிக்கையிலான மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது, தனிநபருக்கு அதிகமாக விற்பனை செய்யும் கடைகளின் விவரங்களை கண்டறிந்து அக்கடைகளின் விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு்ம். மேலும் இதுபோன்ற குற்றத்தை களைந்திட அனைத்து மதுபானக்கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் மதுபானக்கூடங்களை காவல்துறையினர் கண்டறிந்து சீல் வைப்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை

கள்ளச்சாராயம், விஷச்சாராயம், வெளிமாநில மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களின் மீது எவ்வித வெளிப்புற அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமலும், புகாருக்கு இடமின்றியும் விரைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை தொடர்ச்சியாக விற்பனை செய்பவர்களின் மீது தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், உதவி ஆணையர் (கலால்) சிவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story