சிவகிாி அருகே தொடர்ந்து 2-வது நாளாக இறந்த மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; ஆர்.டி.ஓ.- போலீசார் பேச்சுவார்த்தை


சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கந்தசாமிபாளையத்தில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்ற ஹரிசங்கர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஹரிசங்கர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவருடைய உடலை வாங்க மாட்டோம் என ஹரிசங்கரின் உறவினர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கந்தசாமிபாளையத்தில் ஹரிசங்கரின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை கண்காணிப்பாளர் நீலகண்டன், தாசில்தார் மாசிலாமணி ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது மாணவர் ஹரிசங்கர் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் 2 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கந்தசாமிபாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே இரவு 10 மணி அளவில் ஹரிசங்கரின் உருவப்படத்தின் முன்பு அவருடைய உறவினர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கதறி அழுதனர்.


Next Story