உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்
உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கழிவறைக்கு கதவு போடவேண்டும் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் திடீர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அரசு கலைக்கல்லூரி
உடுமலை எலையமுத்தூர் சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்குத்தேவையான குடிநீர் வசதியை செய்து தரவேண்டும். கழிவறைகள் பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமில்லாமல் உள்ளது. 3 கழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. அதனால் கழிவறைகளுக்கு கதவுகள் போட வேண்டும். தினசரி சுத்தம் செய்ய வேண்டும். இந்த அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
அரசு பஸ்களில் பயணம் செய்ய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் பஸ் பாஸ் வழங்கப்படாத நிலையில், கல்லூரியில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காட்டிதான் பயணம் செய்து வருகிறோம். கல்லூரி திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் முதல் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு இன்னும் அடையாளஅட்டை (ஐ.டி.கார்டு) வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலை திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரிக்குள் செல்லாமல் பிரதான நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி, கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த பேச்சு வார்த்தையின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் உடனிருந்தார். பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கலைந்து வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
=========