மேட்டூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு: கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-கலெக்டர் கார்மேகம் பேட்டி


மேட்டூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு: கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-கலெக்டர் கார்மேகம் பேட்டி
x

மேட்டூர் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறினார்.

சேலம்

மேட்டூர்:

கலெக்டர், மேயர் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தொட்டில்பட்டி ஆற்று நீரேற்ற நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ஆற்றில் இருந்து நீரேற்ற நிலையங்களுக்கு எடுக்கும் குடிநீர் முறையாக பரிசோதனை செய்யப்படுகிறதா? எனவும், தண்ணீர் நீரேற்றுவதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? எனவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்றும், தொட்டில்பட்டியில் இருந்து தினமும் மாநகராட்சிக்கு வினியோகம் செய்ய நீரேற்றும் தண்ணீர் அளவு எவ்வளவு? என்றும் கேட்டறிந்தனர்.

135 எம்.எல்.டி தண்ணீர்

இதற்கு அதிகாரிகள் தற்போது நாள் ஒன்றுக்கு மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம் 135 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்படுகிறது என்றனர். கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு சேலம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நீரேற்று நிலையத்தில் அனைத்து பணிகளும் சரியாக நடக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான மூலப்பொருட்கள், பணியாட்கள் போதுமானதாக உள்ளதா? எனவு ஆய்வு செய்தோம்.

குடிநீர் தட்டுப்பாடு

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நீரேற்று நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் தங்கு தடையின்றி நீரேற்றம் செய்யப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திறந்தவெளி நீர்நிலைகள் அதிகமாக உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் தனியாக நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது. மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமார், மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உடன் இருந்தனர்


Next Story