ராமநாதபுரம் உரக்கிடங்கில் திடீர் தீ

ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
உரக்கிடங்கில் தீ
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம்போல குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட அதிக பளு காரணமாக திடீரென்று தீப்பற்றியது.
இந்த தீ அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் குப்பை முழுவதும் பரவி அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் ராஜீ தலைமையில் நிலைய அலுவலர்கள் ராஜேந்திரன், ஜமால் அப்துல்நாசர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்த தகவல் அறிந்த ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தினார். நகராட்சி ஊழியர்களும் வரவழைக்கபட்டு தீயை அணைக்க உதவினர். நகரசபை தலைவர் கார்மேகம் கோரிக்கையை ஏற்று ஏர்வாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இதனை தொடர்ந்து பிற்பகல் 4 மணி வரை போராடி தீயை அணைத்தனர். ராமநாதபுரம் நகராட்சி குப்பை உரக்கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து இதுபோன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி நடக்கும் இந்த தீவிபத்து காரணமாக எழும் புகையால் அந்த பகுதியில் குடியிருப்போர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.