உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திடீர் மறியல்
உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாடுகளுடன் மறியல்
தமிழகம் முழுவதும் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பால் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய தயிர், நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பாலின் கொள்முதல் விலை பல வருடங்களாகவே உயர்த்தப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை எனக்கூறி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி கிராமங்களில் அடுத்தடுத்து மதுரை- தேனி சாலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் மாவட்ட தலைவர் வெண்மணிசந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் நடராஜன், செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் மானூத்து மகேந்திரன், மகேஸ்வரன், லோகமணி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் 50-க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுடன் நூற்றுக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.