அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நன்றாக இயங்க ஒத்துழைக்க தயார்'
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நல்லபடியாக இயங்க ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக விவசாயிகள் உறுதி அளித்துள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. 2021-2022 ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு (ஒப்பந்தம்) செய்யப்பட்டிருந்தது. இதன்படி 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் ஆலையில் குறியீட்டளவிற்கு கரும்பு அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 841 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது.
இந்த ஆலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 1000ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் பதிவு (ஒப்பந்தம்) செய்யப்பட வேண்டும் என்று குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆலையின் களப்பணியாளர்கள், ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளை நேரில் சந்தித்து கரும்பு பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 346 ஏக்கர் கன்னி கரும்பும், 1,397 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1,743 ஏக்கர் கரும்பு மட்டுமே பதிவாகியுள்ளது.
விவசாயிகள் தயக்கம்
பல விவசாயிகள் கரும்பு நடவு செய்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு (2021-2022) அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகை நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி அரவை நின்றது, அதனால் கரும்பு வெட்டுவதற்கு காலதாமதமானது.
கரும்பு வெட்டாட்கள் பற்றாக்குறையால் அதிகப்படியான வெட்டுக்கூலி கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது போன்ற பிரச்சினைகளால் விவசாயிகள், ஆலைக்கு கரும்பு பதிவு செய்வதற்கு தற்போது தயக்கம் காட்டுவதாகவும், கடந்த அரவைப்பருவம் போன்ற நிலை ஏற்படாது என்று ஆலை நிர்வாகம் உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் கரும்பு பதிவு செய்ய முன்வருவார்கள் என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் கரும்பு விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று சர்க்கரை ஆலையின் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் பலர் பேசினர். அவர்கள் பேசும்போது கடந்த அரவைப்பருவத்தின் போது கரும்பு வெட்டுதல் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் வருகிற அரவைப்பருவத்தில் இருக்காது என்ற நம்பகத்தன்மை வரும் வகையில் ஆலைநிர்வாகம் உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கூட்டத்திற்கு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தலைவர் சி.சண்முகவேலு தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் நீலம்பூர் டபிள்யூ.என்.கே.ஈஸ்வரன், பொருளாளர் எஸ்.டி.முத்துச்சாமி, ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் காங்கயம்பாளையம் சின்னப்பன் என்கிற எஸ்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இவர்கள் பேசும்போது இந்த ஆலை நல்லபடியாக இயங்க விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
எந்திரங்களை பராமரிக்க வேண்டும்
இந்த ஆலை இயங்காவிட்டால் கரும்பை மிக்குறைந்த விலைக்கு வாங்கி செல்வதற்கு (வெல்லம் காய்ச்சுவதற்கு) சில வெளியாட்கள் தயாராக உள்ளனர். அதனால் ஆலை நல்லபடியாக இயங்கவேண்டும். ஆலையில் எந்திரங்கள் பழுதடையாத வகையில் எந்திரங்களை பராமரிக்க வேண்டும். கரும்பு வெட்டாட்களுக்கான கூலி, விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய நிலையில் ஆலை நிர்வாகம் நிர்ணயம் செய்யவேண்டும், தேவையான அளவு களப்பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்றனர். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்வதாகக்கூறியுள்ளனர் என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் பேசும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு பணியும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என்றார்.
தீர்மானங்கள்
ஆலையை புனரமைக்க கோரிக்கை விடுப்பதற்காக விவசாய சங்க பிரதிநிதிகள் குழு முதல்-அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.கரும்பு பிரிவில் காலியாக உள்ள களப்பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த தொழிலாளராகளின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். ஆலைக்குள் உள்ள காலிபணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.