தீவட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலைசாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம்

ஓமலூர்
தீவட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி உரிமையாளர்
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர். இவருக்கும், தீவட்டிப்பட்டி அருகே தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மகள் கோபிகா ஸ்ரீ (19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கோபிகா ஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் சந்திரனின் பாட்டி மெல்லியம்மாள் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதற்கு துக்கம் விசாரிக்க தந்தை வீட்டுக்கு செல்ல வேண்டும் என கோபிகா ஸ்ரீ கூறியதாக தெரிகிறது. அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மணிகண்டன் மனைவியை அவருடைய தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து அவர் தனது தந்தை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கோபிகா ஸ்ரீ-யை கணவர் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். இதற்கிடையே கோபிகா ஸ்ரீ உடல்நிலை பாதிக்கப்பட்டதால் காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சந்திரன் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மணிகண்டன் தரப்பினர் தெரிவித்தனர்.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் மற்றும் உறவினர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அதற்கு காரணமான மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி பிரேத பரிசோதனைக்காக கோபிகா ஸ்ரீ உடலை கொண்டு சென்ற ஆம்புலன்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் திருமணமான ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து மேட்டூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.