கோடை விழா, மலர் கண்காட்சி


கோடை விழா, மலர் கண்காட்சி
x
தினத்தந்தி 12 May 2023 7:00 PM GMT (Updated: 12 May 2023 7:00 PM GMT)

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

திண்டுக்கல்

ஆலோசனை கூட்டம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, சிவபாலன், தாசில்தார் முத்துராமன், சுற்றுலா அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோடை விழா

பின்னர் ஆர்.டி.ஓ. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந் தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. இதில் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. மலர் கண்காட்சியினை தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி, படகு அலங்காரப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story