இரவில் வாலிபருடன் பேச்சு... கடன் வாங்கி செலவு... ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்
வாலிபருடன் இரவு நேர செல்போன் பேச்சை நிறுத்தாததால் மனைவியை, கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர், பன்னீர்செல்வம் (வயது 40). கொத்தனார். இவருடைய மனைவி சரண்யா (37). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு அஜய் (16) என்ற மகனும், அக்சிதா (11) என்ற மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். மகள் 6-ம் வகுப்பு முடித்து உள்ளாள்.
சரண்யா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள பல் ஆஸ்பத்திரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வந்தார். நன்றாக சென்று கொண்டு இருந்த சரண்யாவின் திருமண வாழ்க்கையில் சமீபகாலத்தில் புயல் வீச தொடங்கியது. செல்போனில் அவர் ஒரு வாலிபருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்தது. மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சரண்யா கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளாராம். இதுவும் கணவன், மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம், சரண்யாவை அடித்துள்ளார். இதுதொடர்பாக சரண்யா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், சரண்யா அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பெரியவர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இதன்பின்னர் இரவு நேரத்தில் மட்டும் சரண்யா, போன் பேசுவதற்காக தந்தை வீட்டிற்கு தூங்க சென்று வந்ததாக கூறப்படுகிறது.
எவ்வளவோ சொல்லியும் செல்போன் பேச்சை மனைவி கைவிடவில்லை என அவர் மீது பன்னீர்செல்வம் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவி தூங்கி கொண்டிருந்த அறைக்கு நைசாக சென்றுள்ளார். திடீரென சரண்யாவின் வாயைப் பொத்தி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
ரத்தவெள்ளத்தில் மனைவி பிணமானதை உறுதி செய்த அவர், அங்கிருந்து நேராக தனது வீட்டுக்கு வந்துள்ளார். மனைவியை கொலை செய்த கத்தியால் தன் வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நள்ளிரவில் தந்தையை காணாமல் எழுந்து பார்த்த சிறுமி அக்சிதா, வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது வாசல் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பன்னீர் செல்வத்தை பார்த்து அலறினாள்.
சிறுமியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பன்னீர்செல்வத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் பன்னீர்செல்வம் இறந்த சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார், இதுகுறித்து விசாரிப்பதற்காக சரண்யாவின் தந்தை வீட்டிற்கு சென்றனர். அங்கு சரண்யா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற போது மதுபோதையில் பன்னீர்செல்வம் இருந்துள்ளார்.
பன்னீர் செல்வம் தற்கொலை குறித்து அவரது அண்ணன் மாரிமுத்துவும், சரண்யா படுகொலை பற்றி அவரது தந்தை சேதுவும் அளித்த புகார்களின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில், மருத்துவ துறை சார்ந்த பணியில் உள்ள வாலிபர் ஒருவருடன் சரண்யா நெருங்கி பழகியுள்ளார். இருவரும் நீண்ட நேரம் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். அந்த வாலிபரை தேடிவருகிறோம். அவர் சிக்கிய பின்னரே இந்த சம்பவங்களில் உள்ள பின்னணி குறித்து முழுமையாக தெரியவரும்" என்றனர்.
மனைவியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே கத்தியால் குத்தி கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.