தமிழ் நூல்கள் எண்ணில் அடங்காதது

தமிழ் நூல்கள் எண்ணில் அடங்காதது
தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.
பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை, இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆகியவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் என்கிற 2 நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து, கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் நூல்கள்
தமிழ்மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்கள் கடல் போன்றது என்பதை விட, கடலோரத்தில் உள்ள மணற்பரப்பு போன்றது என்றே கூற வேண்டும். மணலை ஒரு பிடி கையில் அள்ளி எத்தனை மணல் துகள்கள் உள்ளன என்பதை எப்படி எண்ணிக்கையில் சொல்ல முடியாதோ, அதுபோன்றது தான் நம் தமிழ் நூல்களின் எண்ணிக்கை.
சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், ஐம்பெரும்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், புதுக்கவிதைகள், நாடகங்கள், கடித இலக்கியங்கள் என பல்வேறு வகைகள் நிரம்பியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளடக்கிய தலைப்பாக இந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கருத்தரங்க ஆய்வுக் கோவையை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானசுந்தரம் பெற்று கொண்டு பேசினார்.
பேரணி
இதில் பாரத்கல்விக் குழும செயலாளர் புனிதா கணேசன், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் பெருமாள் சரவணகுமார், கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ஜெயகிருஷ்ணன், தமிழ்ப்பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர் கவிதா ஆகியோர் பேசினர்.
முன்னதாக, தமிழ்ப்பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை வரவேற்றார். முடிவில் முனைவர் சதானந்தம் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கம் இன்று (வியாழக்கிழமை) மாலை நிறைவடைகிறது. முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மாணவ, மாணவிகள் பேரணியில் கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.