பூம்புகார் சங்கமத்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் சங்கமத்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
திருவெண்காடு:
ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் சங்கமத்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசை
மூதாதையர் நினைவாக மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் பித்ரு தோஷம் நீங்கி காரியத்தடைகள் நீங்குதல், செல்வ செழிப்பு, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு நல்ல காரியங்கள் நடப்பதாக ஐதீகம்.
மாதந்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் ஆடி மாதம், தை மாதம் மற்றும் புரட்டாசி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் செய்து வழிபடலாம் என புராண வரலாறுகள் கூறுகின்றன. காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் நீராடி வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன் கிடைப்பதாக காவிரி மகா மித்தியம் என்ற நூல் தெரிவிக்கிறது.
மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
நேற்று ஆடி மாத பிறப்பு மற்றும் அமாவாசை ஒரே நாளில் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ஒட்டி நேற்று காவேரி சங்கமத்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மேலும் சுமங்கலி பெண்கள் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், கருகமணி உள்ளிட்டவைகளை படையல் செய்து காவேரி அம்மனை வழிபட்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
2 அமாவாசைகள்
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகின்றன. ஆடி மாதமான நேற்று ஒரு அமாவாசையும், ஆகஸ்டு 16-ந் தேதி மற்றொரு அமாவாசையும் வருவதால் பக்தர்களிடையே ஆடி அமாவாசை குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரி கரையில் ஒரு சிலர் மட்டுமே இன்றைய தேதியில் அமாவாசை திதியை கடைப்பிடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் துலாக்கட்ட காவேரி கரையில் ஆடி அமாவாசை அன்று வழக்கமாக காணப்படும் கூட்டம் இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே கூட்டம் இருந்தது.