மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட பட்டியல் தயார்- அதிகாரிகள் தகவல்


மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட பட்டியல் தயார்- அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2023 2:34 AM IST (Updated: 7 Jun 2023 11:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வு

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து குறைந்த மது விற்பனை, அருகருகே மதுக்கடை இருத்தல், கோவில், பள்ளிவாசல், தேவாலயம் போன்றவற்றின் அருகே இருக்கும் கடைகள், கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு மாறாக உள்ள கடைகள், மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகும் கடைகள், கட்டிட உரிமைதாரர் காலி செய்ய வலியுறுத்தும் கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

22 டாஸ்மாக் மதுக்கடைகள்

அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன? அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் பெறப்பட்டு உள்ளன. இதில் கோவை மண்டலத்தில் 88 கடைகள் மூட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில், ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 205 டாஸ்மாக் கடைகளில், 17 கடைகளில் குறைந்த மது விற்பனை உள்ளதாலும், 2 கடைகள் மற்ற கடைகளுக்கு மிக அருகாமையில் இருப்பதாலும், 2 கடைகள் பள்ளிக்கூடம் அருகே உள்ளதாலும், ஒரு கடை பொதுமக்கள் எதிர்ப்பதாலும் என 22 கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி கடை எண் 3816, 3709, 3960, 3546, 3912, 3472, 3464, 3861, 3916, 3666, 3670, 3707, 3697, 3544, 3963, 3847, 3850, 3677, 3902, 3656, 3536, 3507 ஆகிய கடைகளின் விவரம் அரசின் பட்டியலில் இணைந்துள்ளதால் இதற்கான முறையான அரசாணை வந்ததும் 22 கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story