மதுபாட்டிலால் டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.80ஆயிரம் பறிப்பு

தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலால் ஊழியரை தாக்கி ரூ.80ஆயிரம் பறித்த நான்கு வாலிபர்கள் சிக்கினர்.
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சில வாலிபர்கள் மதுபோதையில் வந்து உள்ளனர். மேலும் விற்பனையாளர் சங்கரிடம் பணம் கொடுக்காமல் மதுபாட்டில்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தரமறுத்ததால் அவரிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார்களாம். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் சங்கரை தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் அவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்த விற்பனை பணம் ரூ.80 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.