பள்ளிக்கல்வித்துறையில்ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை இணைத்த அரசுக்கு நன்றிஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்

பள்ளிக்கல்வித்துறையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை இணைத்த அரசுக்கு நன்றி என்று ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்ற பேரவை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெருஞ்சித்திரன் தலைமை தாங்கினார். அரசு ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர் சங்க மாநில தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி மாவட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அம்பிகாபதி, தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி நிறுவனர் ஜான்பிரிட்டோ, ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மனோகர், பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரகுருபரன், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், நலிவடைந்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் இணைத்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்வியை பொதுமைய நீரோட்டத்தில் கலந்து இவர்களை சாதியற்ற சமூகமாக மாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தை நிறைவேற்றியுள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 100 சதவீத இடஒதுக்கீடு முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் காமராஜ், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கடலூர் தலைமை ஆசிரியர் தேவராஜன் நன்றி கூறினார்.