இ.சத்திரப்பட்டியில் கோவில் கும்பாபிஷேகம்

இ.சத்திரப்பட்டியில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டியில் டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதல், கோ பூஜை, யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 24-வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் கும்பங்களுக்கு பூஜை, தளிகை, வேத பாராயணம், சகல ஹோம விதானம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், 108 திரவிய மஹா பூர்ணாகுதி, மந்திர புஷ்பம் கற்பூர ஹாரத்தி, ஹோமங்கள் நடத்தப்பட்டு கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து கோபுர விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 வகையான அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.