போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்

திருவாரூர்


பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்

பெண் போலீஸ்

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீஸ் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றும் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண் போலீசை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்குமாறும், அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தான் அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை

தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் அழைத்து செல்வதாக கூறியதால், கொரடாச்சேரிக்கு பஸ் வந்ததும் பெண் போலீஸ் பஸ்சில் இருந்து இறங்கி சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது சற்குணம், பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ், சற்குணத்திடம் இருந்து தப்பிச்சென்று அவருடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம், அந்த பெண் போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பெண் போலீசுக்கு உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.


Next Story