ஆக்கிரமிப்பை கையகப்படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம்

பெரியவாளவாடி குட்டையில் ஆக்கிரமிப்பை கையகப்படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை தேக்கி வைத்து நிலத்தடிநீர் இருப்பை உயர்த்துவதில் நீராதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்த நீர்மேலாண்மை மற்றும் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பராமரிப்பு காலப்போக்கில் மறைந்துவிட்டது. இதை சாதகமாகக்கொண்ட ஒரு சில நபர்கள் நீராதாரங்கள் அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்ததும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட காரணமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பெரியவாளவாடி கிராமத்தில் உள்ள குளம் ஒன்று தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. ஆனால் அதில் பெயரளவுக்கு மட்டுமே அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசு மற்றும் அதிகாரிகள் மீது அதிருப்தி நிலவி வருகிறது.
அதிகாரிகள் அலட்சியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பெரியவாளவாடி கிராமத்தை சுற்றியுள்ள கிணறு, ஆழ்குழாய்கிணறு மற்றும் ஊர் பொது கிணறுகளுக்கு ஆதாரமாக சுமார் 6.33 ஏக்கர் பரப்பளவில் குட்டை அமைந்துள்ளது. இந்த குட்டைக்கு அருகில் உள்ள நபர்கள் அதில் படிப்படியாக சுமார் ஒரு ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி வந்தனர். இது குறித்து பொதுமக்கள் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட கலெக்டர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குட்டையில் அளவீடு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடுமலை தாசில்தார் குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தனர். இந்த சூழலில் பொதுமக்களின் தொடர் முயற்சியின் காரணமாக குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு பெயரளவுக்கு மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் தனியார்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை குட்டையில் முழுமையாக தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே பெரியவாளவாடி குட்டையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி அந்தப்பகுதியை தூர்வாரி குட்டையுடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.