குறுகலான சாலையால் விபத்து அபாயம்


குறுகலான சாலையால் விபத்து அபாயம்
x

குறுகலான சாலையால் விபத்து அபாயம்

திருப்பூர்

போடிப்பட்டி

திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் கடத்தூர் உள்ளது. இந்த மாவட்ட எல்லைப் பகுதியில் அதிக அளவில் காகித ஆலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் கணியூரிலிருந்து கடத்தூர் செல்லும் சாலையில் தினசரி அதிக அளவில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் 1000 ஆண்டுகள் கடந்த பழமையான அர்ச்சுனேஸ்வரர் கோவில் கடத்தூரில் அமைந்துள்ளதால் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட பகுதியாக இருப்பதால் விவசாயிகள் இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலை குறுகலாக இருப்பதுடன், சாலை ஓரங்களில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது பலரும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையோர பள்ளங்களை நிரப்பவும், சாலையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் இருகரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இரு கரைகளிலும் 50 அடிக்கு மேல் பள்ளம் உள்ள நிலையில் விபத்துக்களைத் தவிர்க்க சாலையோர தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.



Next Story