கடலில் தவறி விழுந்த மீனவர் உடல் மணக்குடியில் கரை ஒதுங்கியது
முட்டத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் உடல் மணக்குடியில் கரை ஒதுங்கியது.
ராஜாக்கமங்கலம்:
முட்டத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் உடல் மணக்குடியில் கரை ஒதுங்கியது.
கடலில் தனியாக மிதந்த வள்ளம்
குமரி மேற்கு கடல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் கடந்த 16 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வள்ளம், கட்டுமர மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து ஒன்றரை நாட்டிக்கல் கடல் மைல் தூரம் சென்றபோது, ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் மிதந்து சென்றது. இதைகண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்கள் தனியாக மிதந்த வள்ளத்தை மீட்டு முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மீனவர் மாயம்
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வள்ளத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அந்த மீட்கப்பட்ட வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (வயது57) என்பவருக்கு சொந்தமானது என்பதும், மீன்பிடிக்கச் சென்ற அவர் கரைக்கு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. அவர் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மாயமாகி இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக அவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், மரியதாசனின் உறவினர்களுடன் 25 வள்ளங்களில் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடல் கரை ஒதுங்கியது
இந்தநிலையில் மணக்குடி கடற்கரையில் நேற்று காலையில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட மீனவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன், குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விரைந்து வந்து கரை ஒதுங்கிய உடலை பார்வையிட்டனர். இதையடுத்து மாயமான மீனவர் மரியதாசனின் குடும்பத்தினரை மணக்குடிக்கு வரவழைத்தனர். அவர்கள் அந்த உடலை பார்த்து அது மரியதாசன் தான் என்பதை உறுதி செய்ததுடன் கதறி அழுதனர்.
சோகம்
இதையடுத்து மரியதாசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மீனவர் மரியதாசனுக்கு பிரபா(48) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
முட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதி மீனவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.