'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் வேலூரில் செ.கு.தமிழரசன் பேட்டி

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வேலூரில் செ.கு.தமிழரசன் கூறினார்.
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வேலூரில் செ.கு.தமிழரசன் கூறினார்.
வேலூரில் நேற்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூரில் புதிய பஸ் நிலையத்துக்கு அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும். தமிழகத்தில் சமீப காலமாக லாக்அப் மரணங்கள் அதிகம் ஏற்படுகிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் இதனை கவனத்துடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களின் கட்சி கொடியை கட்டக்கூடாது. பதாகைகளை வைக்கக்கூடாது போன்ற ஜனநாயக கடமைகளை தடுப்பது சரியல்ல.
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தில் ராணுவத்தில் 4 ஆண்டுகள் தற்காலிக பணியில் சேருவதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவை தான். தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்க்கட்சி போன்ற மாயையை உருவாக்குகிறது. மத்திய அரசு அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதனை உடனே தடுக்க வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.