டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
துணை தாசில்தாருக்கு லஞ்சம் பெற்றுக்கொடுத்த டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
திருச்சி, ஜூன்.1-
மணப்பாறை மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் முத்து. இவருக்கு அவரது சொந்த கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலமானது கூட்டு பட்டாவில் தனது சகோதரர்கள் பெயரில் இருந்தது. கூட்டு பட்டாவில் இருந்த தனது சகோதரர்களின் பெயர்களை நீக்குவதற்காக மணப்பாறை துணை தாசில்தாராக இருந்த உபகாரம் என்பவரை அணுகிய போது, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசிடம் முத்து புகார் அளித்தார். உபகாரம் தனது டிரைவர் ஆறுமுகம் என்பவர் மூலம் முத்துவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது துணை தாசில்தார் உபகாரம் கடந்த 2013-ம் ஆண்டு இறந்து விட்டார். தற்போது வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றம் நிரூபணமாகி, உபகாரம் லஞ்சம் வாங்குவதற்கு உதவியாக இருந்த ஆறுமுகத்திற்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஊழல் தடுப்பு தனி நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.