கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

ஆக்கிரமிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டு தரக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

ஆக்கிரமிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டு தரக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்தார்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கால்கரை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், விவசாயி. இவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அங்கு விநாயகர் கோவில் அருகே அவர் திடீரென்று விஷம் குடித்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்ததாகவும் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனே போலீசார், அய்யப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அய்யப்பன் வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், 'கடந்த 1953-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்த எனது 50 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். ராதாபுரம் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்வது இல்லை. எனவே, அதிகாரிகள் மீதும் கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இலங்கை மக்களுக்கு...

இதேபோல் அய்யப்பன் தனது மகனுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'அன்பு மகனுக்கு... நமக்கு சொந்தமான இடத்தை மீட்டு விற்க வேண்டும். அதில் ரூ.2 லட்சத்தை இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக அந்த பணத்தை தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story