`நரிக்குறவ சமூகத்தினரை தியேட்டருக்குள்அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது': நடிகர் சரத்குமார்

சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது ரொம்ப வருத்தமாக இருந்தது, என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது ரொம்ப வருத்தமாக இருந்தது, என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
பேட்டி
நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொன்னியின் செல்வன் 2-வது பாகம் தொடர்பாக, எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மனவேதனை
சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்து இருப்பது, ரொம்ப வருத்தமாக இருந்தது.
இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மனவேதனையாக இருக்கிறது. அனைவரும் சமம். அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது தடுத்து நிறுத்துவது தவறு. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்பது எதிர்க்கட்சியின் வாதமாக இருக்கும். அது சரியாக இருக்கிறதா, இல்லையா என்பது அரசுக்கு தெரியும். தமிழக போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டமாக வேண்டும். ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி, ஆன்லைனில் பலவிதமான சூதாட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து தடை விதிப்பது அவசியம்.
என்னை பொறுத்தவரை குடிப்பழக்கம், குடியை கெடுக்கும், சிகரெட் பழக்கம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். இந்த இரண்டும் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.