கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம்: சிறுமியிடம் மருத்துவம்- ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் நேரில் விசாரணை


கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம்: சிறுமியிடம் மருத்துவம்- ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் நேரில் விசாரணை
x

ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் சிறுமியிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இதில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தொடர்பு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு:

ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் சிறுமியிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இதில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தொடர்பு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

16 வயது சிறுமி

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு ஈரோட்டை சேர்ந்த 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் அந்த பெண் வாழ்ந்து வந்தார். சிறுமியின் தாய் தனியார் ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் சிறுமியின் கருமுட்டையை அவரது தாய், தாயின் கள்ளக்காதலன், புரோக்கராக செயல்பட்ட ஈரோடு கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதி (வயது 36) ஆகியோர் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்து வந்தனர்.

கருமுட்டை விற்பனை

சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியின் 12 வயதில் இருந்தே அவரது கருமுட்டையை தாய் உள்பட 3 பேர் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்து வந்ததும், ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று 8 முறை கருமுட்டைகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மேலும், தாயின் கள்ளக்காதலன் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும், பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், கருமுட்டை விற்பனை செய்வதற்கு சிறுமியின் வயதை அதிகரித்து காண்பிக்க போலியான ஆதார் அடையாள அட்டை தயாரித்ததும் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி, போலி ஆவணங்களை தயார் செய்த சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் ஜான் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணை

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த வழக்கில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? இதேபோல் வேறு சிறுமிகள் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள், செவிலியர்களிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

மருத்துவக்குழு

இந்தநிலையில் சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் இருந்து மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று ஈரோட்டுக்கு வந்தனர். இதில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.கோமதி, அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு டாக்டர் மலர்விழி, மயக்கவியல் டாக்டர் கதிரவன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இளநிலை நிர்வாக அதிகாரி கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணையை தொடங்கினார்கள்.

ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் சம்பவம் நடந்த விவரங்கள் குறித்தும், கருமுட்டை விற்பனைக்காக யார், யார் அழைத்து சென்றார்கள்? எந்தெந்த ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது? ஆஸ்பத்திரிகளில் வயது விவரத்தை கேட்டார்களா? எத்தனை முறை கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது? என பல்வேறு விவரங்களை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மருத்துவக்குழுவினர் கேட்டறிந்தனர்.

தனியார் ஆஸ்பத்திரி

அங்கிருந்து ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட, ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ குழுவினர் சென்றார்கள். அங்கு ஆஸ்பத்திரியின் நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது கருத்தரித்தல் மையத்தில் கருமுட்டைகளை தானமாக பெறும்போது என்னென்ன வழிமுறைகள் கடை பிடிக்கப்படுகிறது? கருமுட்டை தானம் அளிப்பவர்களின் வயது, உடல்நலம் உள்ளிட்ட விவரங்கள் முறையாக கேட்டறிந்த பிறகு தானம் பெறப்படுகிறதா? தானம் அளிப்பவர்களிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழ்கள் பெறப்படுகிறதா? உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி கருமுட்டை தானமாக அளிக்கப்பட்ட விவரங்கள், அதற்கான ஆவண கோப்புகள் உள்ளதா? என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். பல மணிநேரமாக நடந்த விசாரணையில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், டாக்டர்கள் கொடுத்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து கொண்டனர்.

உரிமம் ரத்து

இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தோம். கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடந்து வருவதால் தற்போது எதுவும் கூறமுடியாது. விசாரணை முடிந்த பிறகுதான் விவரங்களை தெரிவிக்க முடியும்.

கருமுட்டை விற்பனை செய்வதில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், ஆஸ்பத்திரியின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story