மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க வேண்டும்

கவர்னரும், பா.ஜனதாவினரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்தார்.
நாகர்கோவில்:
கவர்னரும், பா.ஜனதாவினரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்தார்.
ஜீவானந்தம் பிறந்தநாள் விழா
பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள ஜீவானந்தம் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் உரிமைகளுக்காக போராடிய பல தலைவர்கள் வாழ்ந்துள்ளனர். இதில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பொதுவுடமை வீரர் ஜீவானந்தம். அவருடைய எழுத்துக்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
ரூ.200 கோடிக்கு சாலை பணி
தமிழக அரசு கடந்த 2½ ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட முழுவதும் ரூ.200 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வடசேரியில் புதியதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
கவர்னரும், பா.ஜனதாவினாரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக கவர்னர் எல்லை மீறி செயல்படுகிறார்.
நீட் தேர்வு
நீட் தேர்வு என்பது தமிழகம் சார்ந்த பிரச்சினை அல்ல. இது ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகும். நீட் தேர்வால் இனி ஒரு தற்கொலையும் நடக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு போராடி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.