கோவில் மனைக்கு வாடகை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்

பூதலூர் அருகே கோவில் மனைக்கு வாடகை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை மெயின்ரோடு மனைப்பகுதி குடியிருப்பு வாசிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-பூதலூர் தாலுகா கண்டமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான மனைப்பகுதியில் வாடகைதாரராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். வாடகையும் தவறாது செலுத்தி வருகிறோம். தற்போது வாடகை தொகையை உயர்த்தி உள்ளனர். இந்த வாடகை உயர்வு நியாயமற்ற முறையில் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு இது குருவி தலையில் பனங்காய் வைப்பது போல் உள்ளது. எனவே இந்த உயர்த்தப்பட்ட வாடகை தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நியாயமான முறையில் வாடகையை நிர்ணயம் செய்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.