டாஸ்மாக் கடையில் வாங்கிய போது கூட்ட நெரிசலில் மதுபாட்டில் உடைந்தது

வெம்பக்கோட்டை அருேக டாஸ்மாக் கடையில் வாங்கிய போது கூட்ட நெரிசலில் மதுபாட்டில் உடைந்தது.
தாயில்பட்டி,
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ரேஷன் கடைக்கு சென்று மண்எண்ணெய் வாங்கி விட்டு வெளியே வரும் போது கூட்ட நெரிசலில் கேன் தவறி விழுந்து, மண்எண்ணெய் முழுவதும் கொட்டி விடும். அப்போது அவர், அழுதுபுலம்புவது போன்று சில வசனங்களை கூறுவது அந்த காமெடி காட்சியின் உச்சக்கட்டம். அந்த காட்சியை நினைவுப்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரு காட்சி அரங்கேறியது. அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ள சில கிராமங்களில் தற்போது வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் தொடர் முகூர்த்த நாளாக இருப்பதாலும் மண்குண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது வனமூர்த்திலிங்காபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், முண்டியடித்து கொண்டு மதுபாட்டில் வாங்கி விட்டு வெளியே வந்தார். கூட்ட நெரிசலில் அவர் வாங்கி வந்த மதுபாட்டில், கைதவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.
அப்போது, அவர் நடிகர் வடிவேலு பாணியில் அழுதுபுலம்ப தொடங்கினார்.
"மதுபாட்டில் வாங்குவதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தேன். இருந்த பணத்தை கொண்டு வாங்கி விட்டேன். தற்போது உடைந்து விட்டது. மறுபடியும் பாட்டில் வாங்க என்னிடம் பணம் இல்லையே" என புலம்பினார். உடனே அங்கிருந்த மதுபிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து, மீண்டும் மதுபாட்டில் வாங்கி கொடுத்தனர். அதனால் மகிழ்ச்சியில் உற்சாகம் அடைந்த அவர், அந்த பாட்டிலுடன் அங்கிருந்து சென்றார்.