அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் நடுத்தரகுடும்பத்தினர் பாதிப்பு இல்லத்தரசிகள் குமுறல்
இல்லத்தரசிகள் குமுறல்
விளைந்ததில் நல்லதை எல்லாம் தேடிப்பிடித்து சாப்பிட்டு வந்த மனிதனுக்கு அனைத்து உணவுகளும் சொந்தமாக இருந்தன. விளைச்சல் செய்த பொருளை இன்னொரு தேவைக்காக பண்டமாற்று செய்ய தொடங்கியபோதே பொருட்கள் மதிப்பு மாற்றம் அடையத் தொடங்கியது. பண்டமாற்று முறை, பணத்துக்கு மாற்றம் என்று வந்தபோது வணிகம் தொடங்கியது. வணிகத்தில் லாபம் என்ற கொள்கை முக்கியம் ஆனபோது பதுக்கல் தொடங்கியது. பொருட்களை பதுக்கத்தொடங்கியபோது பொருட்களின் விலை மதிப்பு உயரத்தொடங்கியது. விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்கள் தேவைக்காக மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்று அரசாங்கமே உணர்ந்தபோது, வரியை விதித்தது. இன்று வரியின் காரணமாக அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து கிடக்கிறது என்று விலைவாசி உயர்வு குறித்து சமூக ஆர்வலர்கள் சிறு பட்டியலைப்போடுகிறார்கள்.
விலை உயர்வு
சமீப காலமாக விலைவாசி என்பது சற்றும் குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல் மந்தநிலை இருக்கிறது. சிறு கடைகள் வைத்து நடத்துபவர்கள் அவ்வப்போது பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருவதால் விலைவாசி உயர்வு அவர்களை பெரிதும் பாதிப்பது இல்லை. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி பொதுமக்களுக்கு கைமாற்றம் செய்யும் பணியை செய்வதால், அவர்கள் பொருட்களின் விலைவாசியை பற்றி கவலைப்படாவிட்டாலும், கடை வாடகை, மின் கட்டண உயர்வு ஆகியவை அச்சப்படுத்தத்தான் செய்கிறது.
வியாபாரம் பாதிப்பு
ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம் கூறியதாவது:-
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஒட்டு மொத்தமாக வியாபாரிகளுக்கு எதிராகவே உள்ளது. 25 கிலோவுக்கு குறைவாக பொட்டலம் போட்டு எதை விற்றாலும் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் சிறு வியாபாரிகள் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போவார்கள். இந்த இலக்கை நோக்கியே பெரு நிறுவனங்கள் அனைத்து பகுதிகளிலும் தங்கள் கடைகளை திறந்து வருகிறார்கள். ஒரு சில பொருட்களுக்கு விலை குறைப்பு அல்லது இலவசம் என்று தந்திரமாக சலுகைகள் அறிவித்து மக்களை ஈர்க்கிறார்கள். ஆன்லைன் மூலம் நடைபெறும் வியாபாரங்களிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதனால் தலைமுறை தலைமுறையாக தங்கள் அருகிலேயே கடை நடத்தி வந்தவர்களை உதறித்தள்ளிவிட்டு மக்கள் சலுகைகளுக்காக பெறுநிறுவனங்களை நோக்கி ஓடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டாயம்
ஈரோடு கலைமகள் வீதியில் சிறிய அளவில் மளிகைக்கடை வைத்து இருக்கும் கே.கார்த்திகேயன் கூறியதாவது:-
தீபாவளி நேரத்தில் வாடிக்கையாளர்களின் முன்பதிவு பெற்று இனிப்பு, காரம் செய்து கொடுப்பது வழக்கம். அதற்காக இந்த ஆண்டு எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வாங்கியபோது கடந்த ஆண்டை விட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து இருந்தது. இதனால் இனிப்பு மற்றும் காரத்துக்கு நானும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருள் தரமாக இருக்கும் என்பதால் எனது வாடிக்கையாளர்கள் விலையைப்பற்றி பார்ப்பது இல்லை. ஒட்டு மொத்தமாக பார்த்தால் விலை உயர்வு அனைத்து வியாபாரத்தையும் பாதித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சோப்பு விலை
புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காரணமாக அரிசி விலை உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு 75 கிலோ அரிசி மூட்டை ரூ.300 அதிகரித்து இருக்கிறது. துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.25 வரை உயர்ந்து விட்டது. உளுந்தம் பருப்பு கிலோவுக்கு ரூ.55 உயர்ந்து உள்ளது. பச்சை பயறு ரூ.20 உயர்ந்து விட்டது. கொள்ளு ரூ.35 உயர்ந்து விட்டது. மிளகு ரூ.250 உயர்ந்து விட்டது. குளியல் சோப் வகைகள் 2 மடங்கு விலை உயர்ந்து உள்ளது. இப்படி அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டது' என்றார்.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக குடும்பம் நடத்தக்கூட சிரமப்படுவதாக குடும்பத்தலைவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சிரமம்
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியை எஸ்.கவிதா கூறியதாவது:-
உணவுப்பொருட்கள் மிகவும் அத்தியாவசியமான தேவை. ஆடம்பர பொருட்கள் விலை உயர்வு என்றால் அந்த தேவைகளை குறைத்துக்கொள்ளலாம். ஆனால் உணவுப்பொருள் விலை உயர்ந்தால் தவிர்க்க முடியாது. நான் பகுதி நேர ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. என்னைப்போன்று பணியாற்றும் அனைவரும் மிகவும் சிரமப்படுகிறோம். சமையல் கியாஸ், மின் கட்டணம், பெட்ரோல் என்று அனைத்தும் உயர்ந்து விட்டது. பருப்பு, எண்ணெய், அரிசி என்று அனைத்து பொருட்களும் தினசரி விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஊதியம் மட்டும் உயரவே இல்லை. இந்த நிலை நீடித்தால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். அனைத்து மக்களுக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவேண்டும். உயர் பட்டப்படிப்புகள் முடித்து அரசு பள்ளிக்கூடங்களில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு வேலை பார்க்கும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 ஆண்டுகள் பின்னோக்கி...
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி சி.நதியா கூறியதாவது:-
எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகின்றன. நானும் எனது கணவரும் கடுமையாக உழைத்து எங்கள் குடும்ப வளர்ச்சியில் அக்கறை செலுத்தி ஒரு நல்ல நிலையை அடைந்தோம். ஆனால் கொரோனாவுக்கு பிறகு எத்தனை சிரமப்பட்டு உழைத்தாலும் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடும்போது எங்கள் குடும்ப பொருளாதார நிலை 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு ஏன் என்று கேட்டால் வியாபாரிகள் சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டுகிறார்கள். இப்போதெல்லாம் பொருட்களை மிகவும் குறைவாக வாங்குகிறோம். சில நாட்களில் போதிய பொருட்கள் இல்லாமலேயே அரைகுறை சமையல் செய்ய வேண்டியது உள்ளது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஊதியத்துக்குள் குடும்பம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் எல்லா பொருட்களையும் அளவு குறைத்து வாங்குகிறோம். வீட்டு வாடகை, மின்சார கட்டணம், சமையல் கியாஸ் செலவுகளை சமாளிக்க கூடுதலாக உழைக்க வேண்டியது உள்ளது. இப்போது உழைப்பு அதிகமாகி, ஊதியம் குறைந்து இருக்கிறது. இது எதிர்காலத்தில் நோய்களால் பாதிக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் பண்டிகைகள் வருகிறது என்றால் அதிக செலவாகிவிடும் என்பதால் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உப்பு
நம்பியூரை சேர்ந்த குடும்ப தலைவி பிரியங்கா உமாசங்கர் கூறியதாவது:-
விவசாயிகளும், வியாபாரிகளும் நேரடியாக பொதுமக்களிடம் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் விலைவாசி பிரச்சினை இல்லை. ஆனால், பெரு நிறுவனங்கள் வியாபாரம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாலும், தங்கள் வியாபாரத்துக்கு அரசுகளை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கி வைப்பதும் விலைவாசி உயர்வுக்கு காரணம். இந்த நிலை மாற பொதுமக்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளை பொருட்களையும், நமது அருகாமையில் உள்ள சிறு வியாபாரிகளிடம் இருந்து பொருட்களையும் வாங்க வேண்டும். விலை வாசி உயர்வால் நடுத்தர மக்கள், ஏழைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விலை உயர்ந்து விட்டன. இனிப்புகள், உடைகள் விலை உயர்ந்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு மளிகைக்கடைகளில் உப்பு மூட்டைகள் வெளியே இருக்கும். உப்பு விலைக்கு வாங்குபவர்கள் அவர்களே எடுத்துக்கொண்டு காசு கொடுத்துவிட்டு செல்வார்கள். ஆனால், இப்போது பெரு நிறுவனங்கள் உப்பு விற்பனையில் போட்டி போடுகின்றன. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு உப்பளங்களில் இருந்து நேரடியாக நமக்கு கிடைக்கும் உப்பு கூட இன்று கிலோ ரூ.20-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வு, பெரு நிறுவனங்கள் சிறு தொழில்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உப்பு விலை சிறு உதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.