நிறுவனங்களில் நாளை முதல் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்

நிறுவனங்களில் நாளை முதல் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்
75-வது சுதந்திர தினவிழாவையொட்டி நிறுவனங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
75-வது சுதந்திர தினவிழா
சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர்துறை ஆணையர் ஆணையின்படியும், திருச்சி தொழிலாளர்துறை கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் அறிவுரைப்படியும் இந்தியாவின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு இந்திய மக்கள் அனைவரும் தங்களது வணிக நிறுவனங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வீடுகளில் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை 3 நாட்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும்.
நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்கள், வீடுகள் மற்றும் பணியாளர்கள் தங்களது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும். மேலும் ஒரு மெய்நிகர் கொடியை அவரவர் இடத்தில் பொருத்தி, தேசியக்கொடியுடன் கூடிய செல்பியை https://amritmahotsav.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து இந்த பெருவிழாவில் தங்களது பங்களிப்பை தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.