காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும்

அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. இப்பணியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி கடந்த 21-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
1-ந்தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 32 ஆயிரத்து 167 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளது. அதில் இதுவரை 12 ஆயிரத்து 179 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாகை மாவட்டத்தில் கலெக்டர் (பொ) ஷகிலா தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் 115 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளது. இதில் 106 வாகனங்கள் ஆய்வுக்கு வந்துள்ளது. வருகிற 1-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளதால் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் வாகன ஆய்வு முடிந்து விடும்.
ஆம்னிபஸ் கட்டணம் பண்டிகை காலங்களில் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. ஆம்னிபஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் ஆட்சியின்போது கிராமங்களுக்கு மினிபஸ் இயக்கப்பட்டது. கடந்த ஆட்சிக்காலங்களில் இயக்கப்படாமல் இருந்தது.
காலிப்பணியிடம் அறிவிப்பு
கலைஞரின் கனவு திட்டமான மினிபஸ் இயக்க, மினிபஸ் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்பட்டதும் அனைத்து கிராமங்களுக்கும் மினிபஸ் இயக்கப்படும்.
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்றார். பேட்டியின்போது தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.