பனைமரம் முறிந்து விழுந்து குழந்தை பலி

தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று காரணமாக பனைமரம் முறிந்து விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், காற்றும் வீசி வருகிறது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்றும் சூறைக்காற்று வீசியது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்தது. இரவில் லேசான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் வீசிய பலத்த காற்றுக்கு பனைமரம் முறிந்து விழுந்து குழந்தை உயிரிழந்த ேசாக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி கே.வி.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன். டிரைவராக உள்ளார். இவருடைய 1¼ வயது குழந்தை முத்துபவானி. நேற்று இரவில் குழந்தை முத்துபவானி வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது வீட்டின் அருகே நின்ற உயரமான பனை மரம் ஒன்று சூறைக்காற்றுக்கு சாய்ந்து ஆடிக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் பலத்த காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் பனை மரம் பாதியில் இருந்து முறிந்து அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை முத்துபவானி மீது விழுந்து நசுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்ைத பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் குழந்தை முத்துபவானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள்.