திண்டிவனத்தில் அங்காளம்மன் வீதிஉலா:பக்தர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு


திண்டிவனத்தில் அங்காளம்மன் வீதிஉலா:பக்தர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் அங்காளம்மன் வீதிஉலா நடைபெற்றது. அப்போது பக்தர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி பூஜை பருவத ராஜகுல மீனவ சமுதாய அங்காளம்மன் அடியார்கள் சார்பில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதிஉலாவாக மயானக்கொள்ளை நடைபெறும் மாரிசெட்டிக்குளத்துக்கு புறப்பட்டு சென்றார். ராஜாஜி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நேரு வீதி, கல்லூரி சாலை வழியாக மாரிசெட்டிக்குளத்தில் நடந்த மயானக்கொள்ளை உற்சவத்துக்கு சென்றடைந்தார்.

போலீஸ் அறிவுறுத்தல்

இதற்கிடையே நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து, மாரிசெட்டிக்குளத்தை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாலை 5 மணியை கடந்தும், அவர்கள் மேளதாளங்களுடன் ஆர்.எஸ். பிள்ளை சந்திப்பில் சென்றனர். இந்நிலையில் அங்கு வந்த போலீசார், மாலை 5 மணிக்குபின்னர் மேளம் அடிக்க கூடாது, என்றும், வேகமாக அங்கிருந்து செல்லுமாறும் ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் அதை கேட்கவில்லை. இதையடுத்து டிரம்ஸ் மேளம் அடித்தவர்களிடம் இருந்து குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விரட்டியடித்தனர்

அதன்பின்னர் போலீசார், தங்களது கையில் இருந்த லத்தியால் தரையில் அடித்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை விரட்டினர். உடன் பக்தர்கள் மற்றும் அம்மன் வேடம் அணிந்தவர்கள் என்று அனைவரும் வேகமாக அங்கிருந்து மாரிசெட்டிகுளத்துக்கு சென்றனர். அங்கு மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமி அங்கிருந்து பின்னர் கோவிலுக்கு சென்றடைந்தது.

சாமி ஊர்வலத்தின் போது போலீசார் திடீரென பக்தர்களை விரட்டியடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story