திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோரை ரெயில்வே போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பழனி ரெயில்நிலையத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், பயணிகள் வருகின்றனர். குறிப்பாக முருகன் கோவிலுக்கு வரும் கேரள, கர்நாடகா மற்றும் வெளியூர் பக்தர்கள் ரெயில் மூலம் தங்கள் ஊருக்கு திரும்பி செல்கின்றனர். இந்தநிலையில் பழனி ரெயில் நிலையத்தில் ஆதரவற்று சுற்றித்திரியும் முதியோர்கள் சிலர் பயணிகளிடம் யாசகம் பெற்று வருவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பழனி ரெயில்நிலையத்தில் யாசகம் பெற்றவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி உத்தரவிட்டார்.
அதன்பேரில் பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் நேற்று பழனி ரெயில்நிலையத்தில் சுற்றித்திரிந்த 4 முதியோர்களை மீட்டனர். பின்னர் அவர்களை சுத்தம் செய்து, புத்தாடை வழங்கினர். தொடர்ந்து அவர்களை அடிவாரம் வீடற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது 3-வது நடைமேடையில் 2 ஆண்கள் அழுக்கு ஆடைகளுடன் சுற்றித்திரிந்தனர். அதை பார்த்த ரெயில்வே போலீசார், அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை பெத்தானியபுரம் மற்றும் அவனியாபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆதரவற்ற இவர்கள் 2 பேரும் ரெயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேருக்கும் புதிய ஆடைகள் மற்றும் உணவு ஆகியவற்றை ரெயில்வே போலீசார் வாங்கி கொடுத்தனர். பின்னர் அவர்களுக்கு உரிய அறிவுரை கூறி, திண்டுக்கல் பாரதிபுரத்தில் செயல்படும் நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.