பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள்

கோடை விடுறை என்பதால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததோடு, படகு சவாரி செய்து சதுப்புநில காடுகளை கண்டு ரசித்துச் சென்றனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட மாங்குரோவ் என்னும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளது. 4,600 கால்வாய்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில காடுகளை பார்க்க பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை காலங்கள், பண்டிகை கால விடுமுறை, வார விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், உறவினர்களுடன் வருவார்கள். அவ்வாறு வரும் அவர்கள் சுற்றுலாத்துறை மூலம் இயக்கப்படும் படகுகளில் சவாரி செய்து, சதுப்பு நிலக்காடுகளை கண்டு ரசித்து செல்வார்கள்.
படகு சவாரி
அந்த வகையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக உறவினர்களுடன் குவிந்ததோடு, படகு சவாரி செய்து சதுப்புநில காடுகளின் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உயர் கோபுரத்தில் ஏறி பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் திண்பண்டங்களை அங்குள்ள பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் சிலர் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள கடல்கன்னி சிலை முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பிச்சாவரம் சுற்றுலா மையம் பரபரப்புடன் காணப்பட்டது.