ஆழித்தேரை அழகுபடுத்தும் பணி தீவிரம்
தேரோட்டம் நடக்க 3 நாட்கள் உள்ளதால் ஆழித்தேரை அழகுபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேரோட்டம் நடக்க 3 நாட்கள் உள்ளதால் ஆழித்தேரை அழகுபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது. தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.
தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது. அலங்கரிக்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
1-ந்தேதி தேரோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த வாரம் முதல் தேரை திருப்புவதற்கு உதவும், முட்டுக்கட்டை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 முட்டுக்கட்டைகள் தயார் செய்யப்பட உள்ளன.தேரோட்டத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் சிறிய தேர் முதல் பெரிய தேர் வரை அனைத்து தேர்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அழகுபடுத்தும் பணி தீவிரம்
தேரின் கட்டுமான பணிகள் பாதிமுடிந்த நிலையில் தற்போது தேரை அழகுபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேரின் மேல் படிந்துள்ள தூசிகளை தண்ணீர் மூலம் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை திருச்சி பெல் நிறுவன பணியாளர்கள் வந்து பெரிய தேர் உள்ளிட்ட 5 தேரின் 4 சக்கரங்களையும் கழற்றி பிரேக்கை சரிபார்த்தனர். பின்னர் தேருக்கு கிரீஸ் போட்டு மீண்டும் சக்கரத்தை பொருத்தினர். தொடர்ந்து தேருக்கு வடம் பொருத்தும் பணிகள், அலங்கார பொம்மைகள் பொறுத்தும் பணிகள், வாசகால் அமைக்கும் பணி, கம்மாளம் பொருத்தும் பணி, அலங்கார படங்கள் அமைக்கும் பணிகள் நடந்தது.
அழகாக காட்சி அளிக்கிறது
தேருக்கு மேல் வெள்ளி குடை அமைத்து அதில் கொடி பறக்கவிடப்பட்டது. அலங்கார துணிகள் போர்த்தபட்டுள்ளதால் தேர் அழகாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று தேரின் அழகை பார்த்து ரசித்ததோடு அதனுடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.