சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 54 யாக குண்டங்கள் அமைக்கும் பணி மும்முரம்


சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 54 யாக குண்டங்கள் அமைக்கும் பணி மும்முரம்
x

சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 54 யாக குண்டங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சேலம்

கும்பாபிஷேகம்

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும்.

கடந்த 1998-ம் ஆண்டு கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன்பிறகு 20 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

54 யாக குண்டங்கள் அமைக்கும் பணி

இந்நிலையில் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக வருகிற 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இதையொட்டி கோவில் பின்புறமுள்ள காலி இடத்தில் பிரமாண்ட முறையில் பந்தல் அமைத்து அங்கு 54 யாக குண்டங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணியில் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

முன்னேற்பாடு

கும்பாபிஷேக விழா நடைபெறும் வருகிற 7-ந் தேதி அதிகாலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், மகா கும்பாபிஷேகமும், 7 மணிக்கு பிரதான யாகசாலைகளில் 6-ம் கால யாகபூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்றைய தினம் காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் வர்ணம் பூசுதல், பக்தர்களுக்கான தேவையான வசதிகள், தரிசனம் செய்வதற்கு தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.


Next Story