பழுதடைந்த கார்குடி பாலத்தை புதுப்பிக்கும் பணி தொடக்கம்-வாகனங்களை இயக்க தற்காலிக பாலம் அமைப்பு

கார்குடியில் பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து வாகனங்களை இயக்க தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்
கார்குடியில் பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து வாகனங்களை இயக்க தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த பாலம்
கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் கார்குடி, அபயாரண்யம் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பழுதடைந்த பாலங்கள் உள்ளது.
இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. முக்கிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் பாலத்தின் கரையோர தடுப்பு சுவர்களும் இடிந்து விழுகிறது. இதன் காரணமாக பழுதடைந்த பாலங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
புதுப்பிக்கும் பணி தொடக்கம்
இந்த நிலையில் கூடலூர் வெளிப்புற பகுதிகளில் விரிவாக்க பணி பரவலாக முடிவடைந்த நிலையில் முதுமலை கார்குடியில் பழுதடைந்து காணப்படும் பாலத்தை எடுத்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து தடை இன்றி நடைபெறுவதற்கு வசதியாக பழுதடைந்த பாலத்தின் அருகே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கனரகம் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள் தற்காலிக பாலம் வழியாக திருப்பி விடப்பட்ட பின்னர் பழுதடைந்த பாலத்தை இடிக்கும் துணி தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, கார்குடியில் பழுதடைந்த பாலம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து திருப்பி விடும் பட்சத்தில் தற்காலிக பாலத்தில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.