வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம், 11 பவுன் திருட்டு

இளையான்குடி அருகே வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம், 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம், 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நகை, பணம் திருட்டு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தில் உள்ள ரெக்ஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். சம்பவத்தன்று இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள விச்சூரில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் 11 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகர் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.