2 வீடுகளில் நகை, பொருட்கள் திருட்டு


2 வீடுகளில் நகை, பொருட்கள் திருட்டு
x

பாளையங்கோட்டையில் 2 வீடுகளில் நகை, பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் 2 வீடுகளில் நகை, பொருட்கள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நகை திருட்டு

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 56). மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துச்சென்று விட்டனர்.

மற்றொரு வீடு

இதேபோல் பாளையங்கோட்டை அப்துல் ரகுமான் முதலாளி நகரை சேர்ந்தவர் நவாஸ் (48). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய தாய் ஜீனத் (70) மட்டும் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜீனத் டவுனுக்கு உறவினரை பார்க்க சென்றிருந்தார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த டி.வி., தையல் எந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை மற்றும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story