குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது
குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது
வாய்மேடு:
குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது என தலைஞாயிறு வேளாண் அதிகாரி நவீன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடை உழவு
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில நாட்களில் கடைமடை பகுதிக்கு வந்து சேரும். இதனால் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ள வேண்டும். வயல்களில் கோடை உழவு செய்யும் போது அதிகளவில் களைகள் கட்டுப்படுத்தபடுகிறது.
கோடை உழவில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு வயல்களில் மழைநீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் அதிகளவில் சேகரிக்கப்படும்.
தேவையான உரங்கள்
கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு உணவாகிறது. மண்ணில் உள்ள நூண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்க கோடை உழவு வாய்ப்பாக அமையும். இதனால் மண்ணில் உள்ள இதர பூச்சிகள் மற்றும் பூஞ்சாணஙகளை கட்டுப்படுத்த முடியும்.
எனவே விவசாயிகள் கோடை உழவை மேற்கொண்டு பயனடையலாம். தலைஞாயிறு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் தலைஞாயிறு, பனங்காடி கொத்தங்குடி, நீர்முளை ஆகிய இடங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல்விதை கோ-51, அம்பாசமுத்திரம் 16 ஆகியவை இருப்பு உள்ளது. இதனை விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்பெறலாம்.
குறுவை சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள், நூண்ணுட்ட சத்துக்கள், திரவ உரங்கள் ஆகியவை இருப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.