திண்டிவனம் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

திண்டிவனம் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரம்மதேசம்,
திண்டிவனம் அடுத்த மானூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பணியும் கடந்த வாரம் தொடங்கியது. இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள், எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்தனர். தொடா்ந்து அவர்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சப்-கலெக்டரிடம் பேசி, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள், மானூர் ஊராட்சியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று சப்-கலெக்டா் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.